“வாழ்க்கையை பிரதிபலிப்பாய், கனவாய்…”

பெங்களூரு திரை விழா 2020 இல் ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கியை திரும்பிப்பார்க்கும் பகுதியில் உள்ள அவரது படைப்புகள் — ஒரு அறிமுகம்

Thirai Naanooru
4 min readFeb 26, 2020

பாபு சுப்பிரமணியன்

An Introduction to Andrei Tarkovsky Retrospective

ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கி

உலக சினிமாவை சுமாராகப் பாத்தவர்களுக்குக் கூட ரஷ்ய திரைச் சிற்பியான ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கியின் படங்கள் பிடிபடாமல் போகலாம். டார்கோவ்ஸ்கி பற்றி இன்னொரு தலை சிறந்த இயக்குனரான இங்மார் பெர்க்மன் பாராட்டிக் கூறியது டார்கோவ்ஸ்கியை நன்றாகப் புரிந்து கொள்ளவும், டார்கோவ்ஸ்கியின் முதன்மையான இடத்தை அறிந்து கொள்ளவும் உதவுகிறது: “டார்கோவ்ஸ்கியின் முதல் படத்தை நான் கண்டு பிடித்தது ஒரு அதிசயம் போன்றது. திடீரென்று நான் ஒரு அறையின் கதவுக்கு முன் நிற்பதையும் அதன் சாவிகள் அதுவரை எனக்குக் கொடுக்கப் படாததையும் உணர்ந்தேன். எப்போதும் நான் நுழைய ஆசைப்பட்ட அந்த அறையில் அவர் சுதந்திரமாகவும் சுலபமாகவும் நடமாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத சந்திப்பாகவும் தூண்டுதலாகவும் நான் உணர்ந்தேன். எப்படி சொல்வது என்று தெரியாமல் நான் எப்போதும் சொல்ல ஆசைப்பட்டதை இன்னொருவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை டார்கோவ்ஸ்கி ஆகச் சிறந்தவர், திரையின் இயல்புக்கு ஏற்றவாறு வாழ்க்கையை பிரதிபலிப்பாய், கனவாய் பிடித்துக் காட்டும் ஒரு புதுமையான மொழியைக் கண்டுபிடித்தவர்.” டார்கோவ்ஸ்கியின் படங்களுக்கு ஒரு அறிமுகத்தை கீழே பார்க்கலாம்.

‘இவான்ஸ் சைல்ட்ஹூட்’ இல் வேலன்டின் சுப்கோவ், வேலன்டினா மல்யாவினா

‘இவான்ஸ் சைல்ட்ஹூட்’ (1962): விளாடிமிர் பொகொலொமோவின் “இவான்” என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட டார்கோவ்ஸ்கியின் இந்த முதல் படத்திலேயே அவரது தனித்துவமான திரைப்பாணி வெளிப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களை பழிவாங்கத் துடிக்கும் ஒரு அனாதைச் சிறுவனைச் சுற்றி வரும் படம் நேரடிக் கதையாக (linear plot) சொல்லப் படவில்லை. டார்கோவ்ஸ்கி கதையோட்டத்தை (narrative) நடு நடுவே நிறுத்தி கனவுகளைக் காட்டுகிறார். படம் முழுவதும் உணர்ச்சிகளைத் தூண்டும் படிமங்கள் (imagery) இருக்கின்றன. உதாரணமாக வண்டியிலிருந்து மணலில் விழுந்த ஆப்பிள்களை குதிரைகள் கடிப்பதையும் மற்றும் இவான் கிணறுக்கு அடியில் நட்சத்திரத்தைத் தேடுவதையும் சொல்லலாம். இந்தப் படிமங்கள் சற்று புதிராக இருக்கலாம். டார்கோவ்ஸ்கியின் புத்தகமான “ஸ்கல்ப்டிங் இன் டைம்” ஐப் படித்தால் அவர் என்ன செய்ய முயல்கிறார் என்பது புரிகிறது. அந்தப் புத்தகத்தில் டார்கோவ்ஸ்கி எழுதியிருக்கிறார்: ஒவ்வொரு கலை வடிவமும் தனித்துவமான வடிவமைக்கும் கூறுகளை (unique formative element) கொண்டது. புதினத்துக்கு “வார்த்தை”, நாடகத்துக்கு “குணம்” (character), ஓவியத்திற்கு “வண்ணம்”. டார்கோவ்ஸ்கி சினிமாவுக்கு வடிவமைக்கும் கூறு ‘காலம்” என்று எழுதியிருக்கிறார். எடுத்து முடித்த திரைப் படம் கால வரைகளின் தொகுப்பு (collection of passages of time) என்கிறார்.

‘ஆண்ட்ரெய் ருப்லெவ்’ இல் அனடலி சோலோநிட்ஸின், நிகோலாய் க்ரிங்கோ

‘ஆண்ட்ரெய் ருப்லெவ்’ (1966): டார்கோவ்ஸ்கியின் இந்த இரண்டாவது படம் 15ம் நூற்றாண்டில் டாடர்களின் (Tatars) கோரத் தாக்குதல் போன்ற மிகப் பெரிய கொந்தளிப்புகளைப் பார்க்க நேரிட்ட கடவுள் உருவங்களை வரையும் ஒரு ஓவியரைப் பற்றியது. கோர்வையில்லாத எட்டு அத்தியாயங்கள் ருப்லெவ் வாழ்ந்த காலத்தை சித்தரிப்பதற்காக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தப்படத்திலும் வெப்பக்காற்று பலூனில் நீர்நிலைமேல் பறக்கும் மனிதன், ஓடும் குதிரைகள், மற்றும் கொட்டும் மழை போன்ற நினைவில் நிற்கும் படிமங்கள் இருக்கின்றன. இயேசுவை சிலுவையில் அறையும் காட்சி ருப்லெவின் கற்பனை போல் வந்து போகிறது. படத்தின் முடிவுப்பகுதி ருப்லெவ் வரைந்த கடவுள் உருவங்களைக் காட்ட வண்ணத்துக்குத் தாவுகிறது.

ஸோலாரிஸ்’ இல் நடால்யா போண்டர்சக்

‘ஸோலாரிஸ்’ (1972): ஸ்டேனிஸ்லா லெம்மின் அறிவியல் கதையான (science fiction) “ஸோலாரிஸ்” ஐ அடிப்படையாகக் கொண்டது இந்தப்படம். மனிதப் பிரக்ஞையை (human consciousness) திரையில் சித்தரிக்கும் கடினமான சாதனையை செய்து காண்பிக்கிறது. சினிமாவின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த காற்றில் மிதக்கும் காட்சி இந்தப் படத்திலும் இன்னும் சில டார்கோவ்ஸ்கி படங்களிலும் தொடர் படிமமாக (recurring imagery) வருகிறது. தன் தந்தை ஆர்ஸெனி டார்கோவ்ஸ்கியின் கவிதையில் இதே போன்று வரும் படிமத்தினால் கவரப்பட்டு மகன் டார்கோவ்ஸ்கி இதைப் படத்தில் உபயோகித்தார். ஹிப்னாடிக் என்று சொல்லக்கூடிய நெடுஞ்சாலைக் காட்சி ஒன்று ‘ஸோலாரிஸ்’ இல் வருகிறது. வண்ணம் காட்சிகளின் வெளிப்பாட்டுத்தன்மையை குலைப்பதால் டார்கோவ்ஸ்கி பல வண்ணக் காட்சி — ஒரே வண்ணக்காட்சியென்று மாறி மாறி எடுத்திருக்கிறார்.

‘தி மிர்ரர்’ இல் மார்கரிடா டெரகோவா

‘தி மிர்ரர்’ (1975): ஒரு நடுத்தர வயது மனிதனின் நினைவுகள், பிரதிபலிப்புகளைப் பற்றி சற்று சுய சரிதையாக கால வரிசையில்லாமல் எடுக்கப்பட்டது இது. போருக்கு முன், போர்க்காலம், போருக்குப்பின் என்று நாம்தான் காட்சிகளை அடுக்கி படத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காற்றில் மிதப்பது மற்றும் வீடு எரிந்து கொண்டிருப்பது ஆகிய — இன்னும் சில டார்கோவ்ஸ்கியின் படங்களிலும் தொடர்ந்து வருகின்ற — அருமையான காட்சிகள் இந்தப்படத்தில் இருக்கின்றன. ஒரே நடிகை கதாநாயகனின் தாயாகவும் மனைவியாகவும் வருகிறார். இது அவனை விட்டுப் பிரிந்த மனைவியுடன் அவனது உறவை அவன் தாய் எவ்வாறு கட்டுப்படுத்தினாள் என்று காண்பிப்பதற்க்காக செய்யப்பட்டிருக்கிறது.

‘ஸ்டாக்கர்’ இல் அலெக்சாண்டர் கைடனோவ்ஸ்கி

‘ஸ்டாக்கர்’ (1979): ஸ்ட்ருகாட்ஸ்கி சகோதரர்கள் தங்கள் புதினமான “ரோட்சைடு பிக்னிக்’ ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதிய திரைக் கதையில் டார்கோவ்ஸ்கி நிறைய மாற்றங்கள் செய்து எடுத்த படம் இது. ஒரு விஞ்ஞானியையும், எழுத்தாளரையும் ஸ்டாக்கர் என்கிற சட்ட விரோதமான வழிகாட்டி ஒருவன், தடை செய்யப்பட்ட மண்டலம் (Zone) என்று அழைக்கப்படும் மர்மப் பிரதேசத்தின் வழியாக வேண்டுதல்களை நிறைவேற்றும் “அறை”க்கு இட்டுச் செல்கிறான். இந்தப்படம் முற்றிலும் புதுமையாக ஓலியையும் மின்னணு இசையையும் (electronic music) — குறிப்பாக நினைவில் நிற்கின்ற ரயில் காட்சியில் — பயன் படுத்தியிருக்கிறது.

‘நாஸ்டால்ஜியா’வில் ஒலெக் யாங்கோவ்ஸ்கி

‘நாஸ்டால்ஜியா’ (1983): 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ரஷ்ய இசையமைப்பாளரைப்பற்றி ஆய்வு செய்ய இத்தாலி நாட்டுக்கு வரும் ரஷ்ய எழுத்தாளரைப் பற்றியது இந்தப்படம். எழுத்தாளரின் கடுமையான ஏக்கம் (nostalgia) அவர் சொந்த நாட்டை விட்டுப் பிரிந்திருப்பதால் மட்டுமல்ல. உலகத்தில் அற்றுப்போன நல்லிணக்கம் மீண்டும் வர வேண்டுமென்ற ஆழ்ந்த விருப்பத்தாலும் கூட. இந்தப்படம் டார்கோவ்ஸ்கி ரஷ்யாவை விட்டு விட்டு மேலை நாட்டில் வசிக்க முடிவு செய்தது மற்றும் முழுமையாக வாழ்தல் பற்றிய அவருடைய எண்ணம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

‘தி ஸேக்ரிஃபைஸ்’

‘தி ஸேக்ரிஃபைஸ்’ (1986): டார்கோவ்ஸ்கியின் இந்த கடைசிப்படம் அணு ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின் பூமியில் பேரரிழிவு நிகழக் கூடிய சமயத்தில் நடக்கிறது. உலகம் அமைதி நிலைக்கு மீள ஒருவர் தான் போற்றும் உடைமை ஒன்றை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார். கடைசிக்கு முந்தைய காட்சி தொழில் நுட்பத்தின் உச்சிக்குச் செல்லும் 10 நிமிட ஷாட்! நெஞ்சை அள்ளும் கடைசிக் காட்சியுடன் படம் டார்கோவ்ஸ்கியின் மகன் ஆண்ட்ரியோஷாவுக்கு நம்பிக்கையுடன் அர்ப்பணிக்கப்படுகிறது.

Babu Subramanian

Andrei Tarkovsky’s Films — An Artilce in Tamil. World Cinema

--

--