ரஷ்யப் படம் ‘Leaving Afghanistan’

புதை குழியான ஆஃப்கானிஸ்தானிலிருந்து 1989 இல் சோவியத் ரஷ்யா மீண்ட கதை

Thirai Naanooru
4 min readSep 9, 2020

பாபு சுப்பிரமணியன்

‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’

அமெரிக்கப் படை முழுவதும் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி நாடு திரும்புமென்று அறிவிக்கப்பட்ட பின் உலகத்தின் கவனம் ஆஃப்கானிஸ்தான் மேல் திரும்பியது. இந்த சமயத்தில் சோவியத் யூனியன் 1989இல் ஆஃப்கானிஸ்தான் என்ற புதை குழியிலிருந்து மீண்டு நாடு திரும்பியதை பவெல் லங்கின் இயக்கிய ‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’ (2019) என்ற ரஷ்யப் படத்தில் பார்க்கலாம். லங்கின், ‘டேக்சி ப்ளூஸ்’ (1990) என்ற படத்தின் மூலம் ரஷ்ய சினிமாவில் புதுமை புகுத்தி கேன் பட விழாவில் சிறந்த இயக்குனர் பரிசு பெற்றவர். இதைத்தவிர ‘தி ஐலண்ட்’ (2006) மற்றும் ‘ஜார்’ (2009) போன்ற படங்களுக்காக பேசப்பட்டவர்.

‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’

கதைக்கரு

‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’ லங்கினின் சமீபத்திய படம். இது ஆஃப்கானிஸ்தான் போரில் அனுபவம் பெற்று ரஷ்ய உளவுப்படைத் தலைவராக உயர்ந்த நைகொலாய் கோவலேவின் நினைவுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. சோவியத் படைகளெல்லாம் நாடு திரும்பும்போது ஒரே ஒரு ரெட் ஆர்மி டிவிஷனுக்கு மட்டும் ஊருக்குச் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஜெனரல் வஸிலியெவின் மகனான விமானி அலெக்ஸாண்டர் முஜாஹிதீனால் பிடிக்கப் பட்டு பிணைக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். இதைத் தவிர இன்னொரு பிரச்சினை சோவியத் படை திரும்பிப் போக வேண்டிய வழியில் உள்ள சலங் கணவாய், முஜாஹிதீனின் பிடியில் இருக்கிறது. முஜாஹிதீனின் தலைவர் ஹோசெமுடன் தொடர்பு கொண்டு அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி அலெக்சாண்டரை மீட்கவும், சலங் கணவாய் வழியே படைக்கு ஆபத்து இல்லாமல் வெளியேறவும் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறி.

‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’

ரஷ்யாவில் எதிர்ப்பு

போர் எப்படி புத்தி பேதலிக்க வைக்கிறது என்பதையும் சோவியத் படை வீரர்கள் கடைசி நாட்களில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் ‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’ தத்ரூபமாக சித்தரிக்கிறது. சோவியத் பார்லிமெண்டே 1989இல் ஆஃப்கானிஸ்தான் போர் ஒரு அரசியல் தவறு என்று அறிவித்தது. ஆனால் இன்றைய ரஷ்ய அரசு அந்தக் கண்டனத்தை மாற்றி எழுத முயற்சி செய்தது. எனவே ரஷ்ய அரசியல்வாதிகளும் முன்னாள் படைவீரர்களும் இந்தப் படத்தைத் தாக்கியிருக்கிறார்கள். ஒரு அரசியல் தலைவர், ரெட் ஆர்மி வீரர்கள் கொள்ளையடிப்பதையும் தங்களுக்குள் அடித்துக் கொள்வதையும் காட்டுவதால் இது தேச விரோதப் படமென்று கூறியிருக்கிறார்.

‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’

போரைப் பற்றிய தலை சிறந்த படங்கள்

பத்து லட்சத்திற்கு மேற்பட்ட ஆஃப்கானிஸ்தான் நாட்டினரும் 15000க்கு மேற்பட்ட சோவியத் படை வீரர்களும் கொல்லப்பட்ட ஆஃப்கானிஸ்தான் போரைப் பற்றி தைரியமாக உண்மையை வெளிக் கொணர்ந்து படமெடுத்ததற்கு லங்கின் பாராட்டப் பட வேண்டியவர். ஆனால் அவர் போட்டி போட வேண்டியது போரைப்பற்றி தன் நாட்டினர் எடுத்த தலை சிறந்த படங்களான மிகேல் கலடொஸோவின் ‘தி கிரேன்ஸ் ஆர் ஃபிளையிங்’ (1957), ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கியின் ‘இவான்ஸ் சைல்ட்ஹூட் ‘ (1962), எலெம் கிலிமொவின் ‘கம் அண்ட் சீ’ (1985) மற்றும் அலெக்ஸை குர்மானின் ‘ட்ரயல் ஆன் தி ரோட்’ (1987) ஆகியவை. லங்கினின் ‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’ இந்தப் படங்களின் அளவுக்கு வராமல் போனதற்குக் காரணம் லங்கினின் அணுகுமுறை.

‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’

ஆவணப்படம் போன்ற வடிவம் (Documentary like form)

லங்கின் நைகொலாய் கோவலேவின் நினைவுக் குறிப்புகளிலிருந்து சற்றும் மாறாமல் உண்மைச் சம்பவங்களை படத்துக்காக மீண்டும் உருவாக்கினாராம். ஆஃப்கானிஸ்தானில் நடந்து வரும் போரினால் அங்கே படமெடுக்க முடியாததால் அதன் அருகே உள்ள நாடுகளில் மலைப் பிரதேசங்களில் எடுத்தாராம். 1989இல் நடந்த நிகழ்ச்சிகளை தத்ரூபமாகக் காட்டுவதால் நம் கண்முன்னால் நடப்பது போன்றிருக்கிறது. கையேந்திய (Hand-held) கேமரா நம்மை சம்பவங்கள் நடக்கும் இடங்களுக்குள் கொண்டு செல்கின்றன. ஒரு படை வீரன் ஹெராயின் கடத்தும் கூண்டு வண்டியை (caravan) கொள்ளையடித்து அந்தப் பணத்தை வைத்து பேனஸோனிக் கேஸட் ரிகார்டரை வாங்குகிறான். மலைப் படையைச் சேர்ந்த இன்னொரு சோவியத் வீரன் அதைப் பிடுங்க சண்டையில் முடிகிறது இந்தக்காட்சி. ஒரு ரெட் ஆர்மி மேஜர் ஏவுகணை செலுத்திகளை (missile launchers) தருவதாக சொல்லி ஆஃப்கானிய போராளிகளை ஏமாற்றி அவர்களிடமிருந்து வாங்கிய பணத்தை வைத்து சோனி பிளாக் ட்ரைனைட்ரான் டிவி வாங்கப் பார்க்கிறான். சோவியத்தினரை நல்ல விதமாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர். முஜாஹிதீனின் தலைவர் ஹோசெம், நாடு திரும்பும் சோவியத் படை, வழியில் உள்ள தன் ஊரை வெடி குண்டுகளால் தாக்காமலிருக்க இரண்டு பேர் பணயக் கைதிகளாக வர வேண்டுமென்று நிபந்தனை போடும்போது கேஜிபி கர்னல் ஒருவர் தான் போகத் தயாரென்கிறார். ஒரு ஆஃபீசர் அவரைத் தடுத்து நிறுத்தி பிணையாகச் செல்ல முன் வரும் ஒரு படை வீரனுடன் சேர்ந்து கொண்டு இருவருமாக கைதிகளாகப் போகிறார்கள்.

‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’

படம் எப்படி?

அந்த தன்னார்வலர்கள் (volunteers) இருவரும் எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறார்களென்பது பின்புதான் தெரிய வருகிறது. அலெக்ஸாண்டரை ஒரு சிறுவன் கொன்று விடுவதால், அவருடைய தந்தை ஜெனரல் வஸிலியெவ், மலை மேல் இரண்டு தன்னார்வலர்களும் அடைக்கப்பட்டிருக்கும் ஊரை வெடி குண்டுகளால் நொறுக்கச் செய்து, பழி வாங்குகிறார். அப்பாவி ஆஃப்கானிய மக்கள் கொல்லப் படுகின்றனர். நிகழ்ச்சிகளை தத்ரூபமாகக் காண்பித்தாலும் இயக்குனர் லங்கின் படத்தை ஒரு அளவுக்கு மேல் எடுத்துச் செல்லவில்லை. ஆவணப்படம் போன்ற வடிவம் அதன் காரணமாக இருக்கலாம். டிவி செய்தி சேனல்கள் போரை நம் வீட்டுக்குளேயே கொண்டுவந்து விட்டன. உலகின் எந்த மூலையில் நடக்கும் போரையும் அது நடக்கும் போதே காஃபி குடித்துக் கொண்டு பார்க்கலாம். போரின் கொடூரம் நமக்கு அவ்வளவாக உறைப்பதில்லை. டிவியில் காட்டுவது உண்மையா பொய்யா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. படம், சோவியத் படை எப்படி மீண்டு வந்தது என்ற உண்மைக் கதைக்கு அப்பால் சென்றிருக்கலாம். ஆஃப்கானியப் போர் சோவியத் யூனியன் சிதைந்து போனதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்தின் கடைசியில் இந்த மாதிரி ஒரு வரி வருகிறது. ஆனால் இது படத்தின் சம்பவங்களிலிருந்து வெளிப் படவில்லை. அதை சித்தரிக்க இன்னொரு படம் வர வேண்டும் வேறு வடிவத்தில்!

Babu Subramanian

Pavel Lungin’s Russian Film Leaving Afghanistan (2019)Film Review in Tamil. World Cinema.

--

--