யக்ஷகானா கலைஞனின் உருமாற்றம்: ‘Harikataha Prasanga’ (Chronicles of Hari)

அனன்யா காசரவல்லியின் கன்னடப் படம் (2016)

Thirai Naanooru
5 min readSep 27, 2020

பாபு சுப்பிரமணியன்

‘ஹரிகதா பிரசாங்கா’வில் ஸ்ருங்கா வாசுதேவன்

கடந்த ஐந்து வருடங்களில் பார்த்த இந்திய கலைப் படங்களில் நினைவில் நின்ற சிலவற்றில் அனன்யா காசரவல்லியின் ‘ஹரிகதா பிரசாங்கா’ (2016) ஒன்று. இது அதிகம் எழுதப் படாததால் இதை சற்று விரிவாகப் பார்க்கலாம். கர்நாடகாவின் பாரம்பரிய நாடக வடிவமான யக்ஷகானாவை பின்னணியாகக் கொண்டது இந்தப் படம். யக்ஷகானாவில் காவிய, புராணக் கதைகளை நாட்டியம், உரையாடலுடன் ஒரு கோஷ்டி நடித்துக் காண்பிக்கும். இன்னொரு கோஷ்டி அரங்கின் பின்னால் அமர்ந்து கொண்டு இசை அளிக்கும். ஆண்கள் மட்டுமே நடிக்கும் மரபு யக்ஷகானாவில் இருந்தது. முற்றிலும் பெண்களைக் கொண்ட குழுக்கள் இப்போது இருக்கின்றன.

‘ஹரிகதா பிரசாங்கா’வில் ஸ்ருங்கா வாசுதேவன்

ஆண்கள் மட்டுமே நடிக்கும் மரபு

உலகில் ஆண்கள் மட்டுமே நடிக்கும் மரபு பரவலாக இருந்திருக்கிறது. புராதன கிரேக்க நாடகம், ஆங்கில மறுமலர்ச்சி நாடகம் மற்றும் சீன இசை நாடகம் (ஓபரா) ஆகியவற்றில் இந்த மரபு இருந்திருக்கிறது. இந்திய நாடகக் கம்பெனிகளில் ஆண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். ஜப்பானிய கபுகியில் இந்த மரபு இன்னும் தொடர்கிறது. சென் கைகேயின் கேன் விருது பெற்ற ‘ஃபேர்வெல் மை கான்குபைன்’ (1993) என்ற படத்தில் பீகிங் ஓபரா கம்பெனியில் ஒரு இளம் நடிகன் பெண் வேஷம் போட பயிற்சியளிக்கப் படுகிறான். அன்றைய இங்கிலாந்தில் மறுமலர்ச்சி நாடக எதிர்ப்பு சக்தி, பெண் வேஷம் போடும் நடிகர்கள் ஆண் தன்மையை இழப்பரென்றும் அவர்கள் அணியும் பெண் உடை அதன் கீழிருக்கும் ஆண் உடலை பாலின மாற்றம் செய்யுமென்றும் அச்சப்பட்டது. ‘ஹரிகதா பிரசாங்கா’ பெண் வேடத்தில் நடிக்கும் ஒரு யக்ஷகானா நடிகன் ஒருவன் தன் பாலினம் பற்றிய அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பது பற்றியது. இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதா என்று தெரியவில்லை. அவ்வாறு இல்லா விட்டாலும் இந்த கதைக்கரு, கற்பனைத்திறம் கொண்ட படத்தை எடுக்க வாய்ப்பை அளிக்கிறது. கதாசிரியர் கோபாலகிருஷ்ண பை, தான் எழுதிய கதையைத் தழுவி அனன்யா மற்றும் அவரது தந்தையும் இந்திய ஆர்ட் சினிமாவில் முன்னணி இயக்குனருமான கிரீஷ் காசரவல்லி ஆகியோருடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார்.

‘ஹரிகதா பிரசாங்கா’

கதைச் சுருக்கம்

ஹரி என்று அழைக்கப்படும் ஹரிஷ்சந்திரா என்ற கலைஞனை மரபின் படி அவனது யக்ஷகானா குழு பெண் வேடம் போட வைக்கிறது. ஹரி பிரபலமாகிறான் குறிப்பாக பெண் ரசிகைகளிடம். இரவு மேல் இரவாக பெண் பாத்திரத்தில் நடித்து வரும் ஹரி தன்னை பெண் பாலினத்தில் அடையாளம் கொண்டு பகலிலும் பெண்ணுடையை அணியத் தொடங்குகிறான். அதற்கு பொது மக்களிடமிருந்து எதிர்ப்பு வருவதால் தன் நாடகக் குழுவை விட்டு விடுகிறான். மற்ற குழுக்களிலும் இதே கதை தொடர்கிறது. அவனுடைய குடும்பத்திலும் வேண்டப் படாதவனாகிறான். முடிவில் அவனுக்கு என்ன ஆகும் ?

‘ஹரிகதா பிரசாங்கா’

படத்தின் கட்டமைப்பு

ஹரியின் கதையை சொல்வது இடையிடையே நிறுத்தப்பட்டு ஒரு இணையான தடத்தில் (parallel track) ஆவணப் படம் எடுக்கும் இருவர் ஹரி தற்கொலை செய்து கொண்டானோ என்ற ஐயத்துடன் நடத்தும் நேர்காணல்கள் காட்டப் படுகின்றன. அவர்கள் பல யக்ஷகானா கலைஞர்களை சந்தித்து திருநங்கையாகிய ஹரியைப் பற்றி முற்றிலும் மாறான கருத்துகளை கேள்விப் படுகின்றனர். ஒருவர் சொல்வது மற்றொருவர் சொல்வதிலிருந்து முரண்பாடாக இருக்கிறது. கதாநாயகனைப் பற்றி ஏதோ மர்மம் இருக்கும்போது இந்த மாதிரி பிறர் சொல்லும் கதைகள் மூலம் படத்தை எடுத்துச் செல்லும் பாணி கையாளப்படும். பிளாட் (plot) நேரியலிலோ (linear) நேரியல் அல்லாமலோ (non-linear) இருக்கும். ‘ஹரிகதா பிரசாங்கா’வில் சம்பவங்கள் கால வரிசையாக வருவதால் இதன் பிளாட் நேரியல் வகைப் படும். ஆனால் படம் ஒரு வித்தியாசத்தைக் கொண்டு வருகிறது. பேட்டிகளில் திருநங்கையாகியவனைப் பற்றி கலைஞர்களிடம் கேட்கும்போது ஒவ்வொருவரும் அவனுக்கு வெவ்வேறு பெயர்களைக் கொடுக்கிறார்கள். இதன்படி பார்த்தால் ஹரி போன்று பெண் வேஷம் போட்டு பெண் உடையை எப்போதும் அணிந்த கலைஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். திருநங்கைகள் என்பதால் அவர்களிடம் சமூகம் அவதூறு காட்டியிருக்கிறது. நேர்காணல் நடத்தும் ஆவணப் பட இயக்குனர் “எல்லாரிடமும் ஹரியைக் காண்கிறேன்” என்று நகைச் சுவையாக சொல்கிறார். படத்தில் ஹரியின் கதா பாத்திரம் பலர்களின் கலவையாக யக்ஷகானாவில் பெண் வேடம் போட்டு பால் மாறி பரிதாபமானவர்களுக்கு முன்னுதாரணமாக (paradigm) கருதப் பட்டிருக்கிறது. பேட்டி கண்டவர்கள் சொன்னதைக் கோர்த்து கதை சொல்லி சமூகத்தை விமரிசிக்க படம் முற்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நிஜமாகவே இந்த மாதிரி பல கலைஞர்கள் திருநங்கைகளாகி குடும்பம் மற்றும் சமூகத்தின் பழிக்கு ஆளாகி இருக்க வேண்டும். அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது அவைகளை விடுத்து இல்லாத பிரச்னைக்காக வருந்துவது போலிருக்கிறது. எனினும் இணையான தடத்தை விட்டு விட்டு பிரதான தடத்தை (main track) தனித்துப் பார்த்தால் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

‘ஹரிகதா பிரசாங்கா’

ஹரியின் உருமாற்றம்

யக்ஷகானா காட்சிகள் படத்தின் கருத்துடன் (theme) ஒத்துப் போவதாக அமைக்கப் பட்டிருக்கின்றன. முதல் காட்சியில் ஹரி ஆண்களை வெறுத்து அல்லி ராஜ்யம் நடத்திய பிரமீளாவாக வருகிறான். அவனுடைய நடனம் நயமாக இல்லா விட்டாலும் பெண்ணுலகத்தில் ஹரி நுழையப் போவதை இது முன்னதாக அறிவிக்கிறது. தான் பெண்ணாக நடிக்கும் ஆணா அல்லது ஆணாக நடிக்கும் பெண்ணா என்ற சந்தேகம் அவனுக்கு உதிக்கிறது. யக்ஷகானா கலைஞர்களுடன் சகவாசம் கொண்ட கல்யாணியின் வீட்டுக்குப் போகும்போது அவள் சொல்கிறாள் மற்றவர்கள் திரைப்படத்தில் வருவதுபோல் மல்லிகைப்பூ கொண்டு வரும்போது ஹரி மட்டும் கனகாம்பரம் கொண்டு வருகிறான் என்று. பெண் தன்மையுள்ள ஹரியை அவன் போடும் பெண் வேடத்தில் அடையாளம் கொள்ளும் கல்யாணி பெண்களுக்குத்தான் மற்ற பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியுமென்கிறாள். அடுத்த யக்ஷகானா காட்சியில் ஹரி தன் காதலனை வரவேற்கும் பிரபாவதி பாத்திரத்தை நளினமாக செய்கிறான். அம்பையாக ஹரி நடிக்கும் கடைசி காட்சி அவனுடைய நிலைமையை எதிரொலிக்கிறது. ஹரியைக் கூட்டி வந்து தன் வீட்டில் வைத்திருக்கும் வயதான கலைஞர், கிராமத்தினர் சேலை கட்டிய ஹரி அவருடன் தங்குவதை எதிர்த்த பின், ஹரியிடம் அவன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக முடியுமா என்று கேட்கிறார். அவருடன் இருக்க முடியாததால் ஹரி ஊர் செல்லும்போது அவனுடைய தம்பி சீனா ஆத்திரமடைந்து ஹரி வருவதை எதிர்க்கிறா ன். ஹரியின் அக்காவும் அவளது கணவனும் அவனைப் பார்த்தவுடன் வீட்டுக்குள் சென்று அவனை முகத்தில் அறைவது போல் கதவை சாத்துகின்றனர். அம்பை முதலில் சால்வனாலும் பின்னர் பீஷ்மராலும் நிராகரிக்கப் படுவது அவனுக்கு நடந்ததை நினைவூட்டுகிறது. சிகண்டி என்ற திருநங்கையாக மாறி பழி வாங்கப் போவதாக சபதமெடுத்து அம்பை பீஷ்மரை சபித்து விட்டு அக்னிக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஹரியும் படத்தின் கடைசிப் பகுதியில் ஆற்றில் இறங்கி உயிர் துறக்கிறான். (ஆனால் அவனது தற்கொலை பற்றி போலிஸ் ஆவணத்தில் பதிவு இல்லை.) சேலையை விடுத்து வேட்டியைக் கட்டி பெண்ணுலகத்திலிருந்து வெளி வருமாறு அவன் கட்டாயப் படுத்தப்பட்ட பின் இது நிகழ்கிறது.

நினைவுக்கு வரும் ‘பண்ணத வேஷா’ (1988)

படத்தின் வண்ண மயமான யக்ஷகானா பின்னணி இதே பின்னணியில் அனன்யா காசரவல்லியின் தந்தை கிரீஷ் காசரவல்லியால் எடுக்கப்பட்ட இன்னொரு படமான ‘பண்ணத வேஷா’வை நினைவூட்டுகிறது. அந்தப் படமும் அடையாள நெருக்கடியில் உழலும் ஒரு யக்ஷகானா கலைஞனை சுற்றி வருகிறது. மற்றவர்கள் செய்ய மறுத்த வண்ண முகமூடி அணிந்த “ஜூஞ்சூட்டி” என்ற பிசாசு பாத்திரத்தை ஏற்று அதீதப் பயிற்சி செய்திருந்ததால் சோர்வடைந்து அரங்கத்தில் கீழே விழுகிறான். அவன் மேல் ஆவி வந்து விட்டது என்று மக்கள் நம்பி அவனை வணங்குகிறார்கள். ஆனால் இந்த பிசாசு பாத்திரம் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துகிறது. வண்ண வேஷத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு அவன் வேறு பாத்திரம் தேடிச் செல்கிறான். ஆனால் ஹரியோ பெண்ணினத்தில் தன்னை பூரணமாக அடையாளம் கண்டு கொள்கிறான். அதிலிருந்து மீள்வது சோகத்தில் முடியும்.

‘ஹரிகதா பிரசாங்கா’

‘ஹரிகதா பிரசாங்கா’ எப்படி?

பெரும்பாலும் கேமராவை நகர்த்தாமல் நடிகர்களுக்கு போதிய நேரம் கொடுத்து ஷாட்களை நீளமாக எடுத்திருக்கிறார்கள். உதாரணமாக பாவாடை அணிந்த ஹரி ஃபிரேமின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்க, அவன் தாய் இடது பக்கமாகவும் தம்பி சீனா நடுவிலும் அமர்ந்திருக்கும் காட்சியை சொல்லலாம். இந்தக் காட்சியில் ஹரி அவர்களிடம் தான் யக்ஷகானா குழுவை விட்டு விட்டதாகவும் தன்னால் இரவில் பெண்ணாகவும் பகலில் ஆணாகவும் இயங்க முடியாது என்றும் கூறுகிறான். சீனா இதைக் கேட்டு தன் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொள்கிறான். உறவினர் யாராவது இறந்தால் குளிப்பது வழக்கம். தன் செய்கையின் மூலம் சீனா தன்னைப் பொறுத்த வரை ஹரி இறந்து விட்டதாக கருதுவதாக உணர்த்துகிறான். இந்தக் காட்சியில் கேமரா நகர்வதில்லை. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கட் செய்யப் படுவதில்லை. உடித் குரானாவும் பாலாஜி மனோஹரும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பெண் தன்மையுடைய ஹரியின் அடையாள சிக்கலை அருமையாக சித்தரிக்கும் ஸ்ருங்கா வாசுதேவனின் நடிப்பு மறக்க முடியாதது.

இயக்குனர் அனன்யா, படத்தை தன் தாய் வைஷாலி காசரவல்லிக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார். வைஷாலி நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் நடித்த திறமையான நடிகை. அவர் எடுத்த டிவி சீரியல்கள் பாராட்டப்பட்டன. தன் கலைக் குடும்பத்தின் வழியில் அனன்யா தொடர்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘ஹரிகதா பிரசாங்கா’, படத்தின் தனித்துவமான பாத்திரத்தின் தனித்துவமான உலகில் இன்னும் அதிகமாக மூழ்கியிருக்கலாம். எனினும் இது இளம் இயக்குனர் அனன்யாவின் பாராட்ட வேண்டிய கன்னி முயற்சி.

Babu Subramanian

Ananya Kasaravalli’s 2016 Kannada film ‘Harikatha Prasanga’ (Chronicles of Hari) - Film Review in Tamil. World Cinema.

--

--