நுண்ணுணர்வு குன்றிய காலத்தில் கலை: ‘The Wild Pear Tree’

Thirai Naanooru
4 min readDec 6, 2019

பாபு சுப்பிரமணியன்

சினிமாவை இலக்கியத் தரத்துக்கு உயர்த்த முயல்கிறார் துருக்கிய இயக்குனர் சீலன்

The Wild Pear Tree/ Nuri Bilge Ceylan/ Turkey/ 2018

‘தி வைல்ட் பேர் ட்ரீ’’ யில் ஐடின் டோகு டெமிர்கொல், ஹசர் எர்குக்லு

நியூரி பில்ஜ் சீலனின் ‘தி வைல்ட் பேர் ட்ரீ’ 2018 இல் வந்த திரைப்பட விழாப் படங்களில் தலை சிறந்தது. சீலனின் அருமையான படமான ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் அனடோலியா’ (2011) மற்றும் கேன் விருது பெற்ற ‘வின்டர் ஸ்லீப்’ (2014) ஆகிய இரண்டையும் திரைப்பட ஆர்வலர்கள் பார்த்திருப்பார்கள். ‘தி வைல்ட் பேர் ட்ரீ’யில், சனாக்கலே என்ற நகரத்தில் கல்லூரியில் படித்து விட்டு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற கனவுடன் சொந்த ஊர் திரும்புகிறான் சினான். அந்த சிற்றூரில் இலக்கியம் பற்றிப் பேசக் கூட ஆளில்லை. அவனுடன் பள்ளியில் படித்தவள் ஒரு நகை வியாபாரியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள். பள்ளி ஆசிரியரான அவனது தந்தை இத்ரிஸ், சூதாட்டத்தில் சொத்தை இழக்கிறார். தான் எழுதிய புத்தகத்தைப் பதிப்பிக்கப் பணம் வேண்டி சினான் சந்திக்கும் ஊர் முதல்வரும் மணல் வியாபாரியும் அவனிடம் கை விரிக்கிறார்கள்.

‘தி வைல்ட் பேர் ட்ரீ’’ யில் ஐடின் டோகு டெமிர்கொல்

படத்தின் வடிவமைப்பு
கதை சொல்வது மட்டுமல்ல இயக்குனர் சீலனின் எண்ணம். கதையின் மூலம் அவர் மனித நிலையை ஆராய முயல்கிறார். அதனால் தான் அவருடைய முந்தைய படமான ‘வின்டர் ஸ்லீப்’பைப் போல் பல அத்தியாயங்களுடன் நாவல் மாதிரி இதுவும் விரிகிறது. உரையாடல்கள் நிறைய இருக்கின்றன. பிரபல எழுத்தாளர் சுலைமானுடன் சினான் பேசும் காட்சி குறிப்பிடத் தக்கது. அவரைத் துரத்தி அடித்து அவரையும் மற்ற முன்னணி எழுத்தாளர்களையும் அவனுடைய அளவுகோலை அவர்கள் எட்டாததால் சினான் வார்த்தைகளால் தாக்குகிறான். அனுபவமின்மையால் அவன் அவர்களைச் சாடுவதைப் பார்க்கும்போது நமக்கே சினானை அறையலாம் போலிருக்கிறது. பள்ளியில் உடன் படித்த பெண் ஹதிஜெ, போலீஸ்கார நண்பன், இரு இமாம்கள் ஆகியோருடன் நடக்கும் உரையாடல்கள் படத்திற்கு பன்முக நோக்கையும் (perspective) ஆழத்தையும் கொடுக்கின்றன.

‘தி வைல்ட் பேர் ட்ரீ’’ யில் ஹசர் எர்குக்லு, ஐடின் டோகு டெமிர்கொல்

ஹதிஜெயுடன் சந்திப்பு
பள்ளியில் ஹதிஜெக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய சினான், அவள் பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விட்டாளென்று சொல்வதைக் கேட்டு ஆச்சரியப் படுகிறான். அவள் தலைக்கு முக்காடு போட்டிருப்பதால் அவளை முதலில் அவன் அடையாளம் காண்பதில்லை. சொந்த ஊரைப் பற்றி அவர்களுடைய கருத்துகள் மாறாக இருக்கின்றன. குறுகிய மனமும் குருட்டுப் பிடிவாதமும் உள்ளவர்களின் ஊரில் அழிந்து போக அவனுக்கு விருப்பமில்லை. தேர்வு எழுதி கிழக்குப் பகுதியில் ஆசிரியர் வேலையில் சேர்வது அல்லது ராணுவ சேவை செய்வது அவனுடைய திட்டம். அழகுச் சிலை போன்ற ஹதிஜெ, அந்த சிற்றூர் வாழ்க்கையின் அழகை வர்ணிக்கிறாள். அவள் நகை வியாபாரியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று அவன் தெரிந்து கொள்கிறான். அவள் வேறு உலகத்தில் இருக்கிறாள். அவளிடம் புத்தகம் எழுதுவது பற்றி சினான் பேசக் கூட முடியாது. உணர்ச்சி ஊட்டுகிற இந்தக் காட்சியில் அவள் கூந்தல் காற்றில் பறக்கிறது. முத்தத்துடன் முடியும் இந்த அழகான காட்சி ரம்மியமான சோலையில் மாறும் மன நிலைகளை நன்றாக சித்தரிக்கிறது.

‘தி வைல்ட் பேர் ட்ரீ’’

போலீஸ்கார நண்பனுடன் பேச்சு
கலவரத் தடுப்பு போலீஸில் வேலை செய்யும் நண்பனிடம் சினான் கைபேசியில் பேசுகிறான். இலக்கியத்தில் பட்டம் பெற்ற இந்த நண்பன் வேறு வேலை ஒன்றும் கிடைக்காததால் நல்ல சம்பளம் கிடைக்கும் போலீஸ் வேலையில் சேர்ந்தான். கண்ணீர்ப்புகையாலும் தண்ணீர்ப் பீரங்கியாலும் கலவரங்களை அடக்குகிறான். கம்யூனிஸ்டுகளை அடித்து நொறுக்குவது பற்றி இரக்கமேயில்லாமல் தன்னிடம் உள்ள மன அழுத்தம் குறைய இன்னொருவர் மேல் காட்டுவதாகச் சொல்கிறான். சினானுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லையென்றால் அவனும் போலீஸில் தான் சேர வேண்டியிருக்கும்.

‘தி வைல்ட் பேர் ட்ரீ’’ யில் முரத் செம்சிர்

இமாம்களுடன் உரையாடல்
சினான், அவனுடைய நண்பன் இமாம் வெய்செல், வெய்செலின் நண்பன் இமாம் நஸ்மி ஆகிய மூவரும் மத சம்பந்தமான விஷயங்களை அலசுகிறார்கள். சினானின் தந்தை இத்ரிஸ் இப்படி ஆகி விட்டாரென்று வெய்செல் சொல்ல, சினான் தன் தந்தையை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறான். “பனி போல தூயதாக யாரும் தங்களைக் கருதக் கூடாது” என்கிறான். “நாம் எல்லோருமே கண்ணுக்குத் தெரியாத இழைகளினால் பிணைக்கப் பட்டிருக்கிறோம் அல்லவா?” என்று வெய்செலிடம் கேட்கிறான் சினான். இது வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களான இத்ரிஸ் மற்றும் சினான் போன்றவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தப் படத்தின் மையக் கருத்தாக ஒலிக்கிறது.

‘தி வைல்ட் பேர் ட்ரீ’’ யில் ஐடின் டோகு டெமிர்கொல், முரத் செம்சிர்

தந்தை மகன் உறவு
“துருக்கியன் தன் ஆன்மா மேம்பட கிணறு வெட்டுகிறான்” என்று ஆன்டன் செகோவ் தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியிருப்பதாக விளாடிமிர் நபொகோவ் கூறுகிறார். இதைப் படித்தால் புரிகிறது இத்ரிஸ் மலைப்பாங்கான இடத்தில் தண்ணீரே இல்லாத நிலத்தில் ஏன் கிணறு வெட்டுகிறாரென்று. இத்ரிஸின் தந்தை, அங்கே தண்ணீர் தேடி கிணறு வெட்டுவது வீண் என்று அவரைக் கேலி செய்கிறார். இவர்களிடையே உள்ளதை விடப் பெரிய மோதல் இத்ரிஸுக்கும், அவர் மகன் சினானுக்கும் இடையே இருப்பது. வீட்டை விற்று வந்த பணத்தை சூதாட்டத்தில் இழந்து குடும்பத்தைத் தவிக்க விட்டாரென்று தந்தை பற்றித் தன் தாய் அஸுமானிடம் சினான் சொல்கிறான். தந்தை அவனுக்குக் குறையொன்றும் வைக்காமல் வளர்த்தார் என்கிறார் அஸுமான். சினான் தன் புத்தகத்தைப் பதிப்பிக்க சேர்த்து வைத்த பணத்தில் கணிசமான தொகை தொலைந்து போகிறது. தன் தந்தைதான் அதை எடுத்திருக்கிறாரென்று அவர் மேல் சினான் சந்தேகப்படுகிறான். தந்தைக்குச் செல்லமான அவரது வேட்டை நாயை அவருக்குத் தெரியாமல் விற்று புத்தகத்தை அச்சடிக்கிறான். கடைசியில் ஒரு பிரதி கூட விற்காத நிலையில் அவனுடைய புத்தகத்தைப் படித்த ஒரே நபர் அவன் தந்தைதான் என்று அவனுக்குத் தெரிய வருகிறது. அவர் அவன் எழுத்தைப் பாராட்ட வேறு செய்கிறார். புத்தகத்தின் பெயரும் “The Wild Pear Tree” தான். தொடக்கப் பள்ளியில் தந்தைதான் காட்டு பேரிக்காய்களைப் பற்றி சொல்லிக் கொடுத்ததாக அவரிடம் சினான் நினைவு கூர்கிறான். தான், அவர், மற்றும் அவரது தந்தை ஆகிய மூவரும் காட்டு பேரிக்காய் மரத்தை நினைவு படுத்துவதாக அவரிடம் சொல்கிறான். “நாம் எதனுடமும் பொருந்தாமல் தனித்து நிற்கும் வடிவமற்ற காட்டு பேரிக்காய்கள்” என்கிறான். “காட்டு பேரிக்காய்கள் சரியான வடிவமற்றவைதான். ஆனால் சுவையாக இருக்கும்” என்கிறார் இத்ரிஸ். படத்தின் முடிவில் சினான், அவன் தந்தை எதை முயற்சித்து கேலிக்குள்ளானாரோ அதைத் தொடர்கிறான். இது தன் ஆன்மா மேம்பட இலக்கியத்தித்தில் விடா முயற்சியுடன் ஈடுபடுவதென்று அவனெடுக்கும் உறுதியையும், அவன் தன் தந்தையை அவருடைய தோல்விகளுடன் ஏற்றுக் கொள்வதையும் குறிக்கிறது.

‘தி வைல்ட் பேர் ட்ரீ’’

படம் எப்படி?
முந்தைய படங்கள் போல் துருக்கியின் அழகை ஒளிப்பதிவாளர் கோகன் திர்யகி அருமையாக எடுத்துள்ளார். சினானின் தந்தை இத்ரிஸாக மூரத் செம்சிர் சிறப்பாக நடித்திருக்கிறார். JS Bach இன் “Passacaglia in C minor” தொடரும் தீமாக வந்து படத்தை உயர்த்துகிறது.

சீலன், தான் போற்றும் 19ம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் தரத்திற்க்கு சினிமாவைத் தூக்கிச் செல்ல முயல்கிறார். தலை சிறந்த ரஷ்ய இயக்குனர் ஆண்ட்ரெய் தார்கோவ்ஸ்கி இதை, புதிதாக ஒரு திரை மொழியை உருவாக்கி, ஏற்கனவே சாதித்து விட்டார். சீலன் தனக்கே உரிய பாதையில் அதை அடைய முயற்சிக்கிறார். ‘தி வைல்ட் பேர் ட்ரீ’ சோதனைப் படத்தின் நிலையில்தான் இருந்தாலும், தற்போது உலக சினிமாவில் முக்கியமான இயக்குனரான சீலனின் மிகச்சிறந்த படைப்பென்பதால் இது 2018 இன் தலை சிறந்த படம்!

Babu Subramanian

Nuri Bilge Ceylan’s The Wild Pear Tree — Film Review in Tamil. World Cinema.

--

--