Thirai Naanooru
5 min readOct 7, 2019

--

மனித நிலை மேல் ஒளி பாய்ச்சிய இங்மார் பெர்க்மனின் இருண்ட சினிமா

பாபு சுப்பிரமணியன்

பெங்களூரு திரைப்பட விழாவில் பெர்க்மன் நூற்றாண்டு அஞ்சலியில் காட்டப்பட்ட படங்கள் — ஒரு பார்வை

Ingmar Bergman

உலக சினிமா ரசிகர்கள் சுவீடன் நாட்டு இயக்குனர் இங்மார் பெர்க்மன் பற்றி தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட அவர்கள் பார்த்த பெர்க்மன் படங்களில் ஒன்றின் பெயரையாவது சொல்வார்கள். “இயக்குனர்களின் இயக்குனர்” ஆன அவரது முக்கிய படங்கள் ஒவ்வொன்றையும் முன் மாதிரியாகக் கொண்டு ஐந்தாறு படங்களாவது வந்திருக்கின்றன!

குற்ற உணர்வு, அடக்குமுறை, தண்டனை ஆகியவை அவரது படங்களின் தொடர் கருத்துகளில் (recurring themes) சில. பாதிரியாரான அவருடைய தந்தை சிறு வயதில் தண்டனைகள் கொடுத்து பெர்க்மன் திருந்த வேண்டுமென்று அவமானப் படுத்தியிருக்கிறார். Fanny and Alexander என்ற படத்தில் வரும் பிஷப் வர்கீரஸ் பாத்திரத்தைத் தனது தந்தையை ஒட்டிதான் உருவாக்கினாராம் பெர்க்மன். அலெக்ஸாண்டர் பாத்திரம் சிறு வயது பெர்க்மன்தான். அவரது தாய் பெர்க்மன் மேல் விருப்பும் வெறுப்பும் கலந்து காட்டினார். நோய்வாய்ப்பட்ட குழந்தை பெர்க்மன் பிழைக்காதிருந்தால் அவருடைய தாய் தன் கணவரை விட்டு விட்டுப் போயிருப்பாராம். ஐந்து முறை மணந்த பெர்க்மன், மணந்திருக்கும்போதே ஹாரியட் ஆண்டர்ஸன், பீபி ஆண்டர்ஸன், லிவ் உல்மன் ஆகிய நடிகைகளுடன் உறவு வைத்திருந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பட்ட காயங்கள் அவரது படைப்புகளில் வெளிப்பாடாகின. தன் படங்களின் மூலம் அவரால் தன்னை ஆய்வு செய்து கொண்டு குணப்படுத்திக் கொள்ள முடிந்ததாம்.

பெர்க்மனுக்குப் பேருதவியாக இருந்தவர்கள் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களான குன்னர் ஃபிஷரும் ஸ்வென் நைக்விஸ்டும்தான். பெங்களூரு பட விழாவில் காட்டிய ஆறு பெர்க்மன் படங்களில் முதலிரண்டு குன்னர் ஃபிஷரின் கேமராவுக்கு சான்று. மற்றவை அகில உலகில் தலை சிறந்த ஒளிப்பதிவாளரென்று கருதப்படும் ஸ்வென் நைக்விஸ்டின் வித்தைக்கு அத்தாட்சி! அந்த ஆறு படங்களைப் பற்றி சுருக்கமாகக் கீழே பார்க்கலாம்.

Gunnar Björnstrand, Margit Carlqvist, Eva Dahlbeck, Jarl Kulle, Åke Fridell & Naima Wifstrand in ‘Smiles of a Summer Night’

1. Smiles of a Summer Night (1955)
கேன் திரைப்பட விழாவில் விருது பெற்று பெர்க்மனுக்கு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கித்தந்த இந்தப் படம் திருமணத்துக்கு அப்பால் உறவு பற்றிய காமெடி. நடுத்தர வயதினரான வழக்கறிஞர் ஃபிரெடரிக் எகர்மனின் (குன்னர் பியார்ன்ஸ்ட்ராண்ட்) இரு திருமணங்களுக்கு நடுவே அவரது வைப்பாட்டியாக இருந்தவர் டிஸைரீ ஆர்ம்ஃபெல்ட் (இவா டால்பெக்) என்ற நாடக நடிகை. தன் மகனை விட ஒரு வயது சிறியவளை இரண்டாம் தாரமாக மணந்த பின் டிஸைரீயை மறுபடியும் நாடுகிறார் ஃபிரெடரிக். டிஸைரீயிடம் திருமணமான கர்னல் ஒருவர் உறவு வைத்திருக்கிறார். ஃபிரெடரிக்கின் மகனும் இரண்டாவது மனைவியும் காதல் வயப்படுகிறார்கள். ஃபிரெடரிக் வீட்டில் கவர்ச்சியான இளம் பணிப்பெண் பெட்ரா (ஹாரியட் ஆண்டர்ஸன்) வீட்டு ஆண்களைக் கட்டி இழுக்கிறார். பெர்க்மன் அபூர்வமாக எடுத்த இந்தக் காமெடியிலும் இருண்ட கணங்களும் அடிப்படையான சோகமும் இல்லாமல் இல்லை.

Victor Sjöström & Bibi Andersson in ‘Wild Strawberries’

2. Wild Strawberries (1957)
சுவீடனின் முன்னோடி நடிகர் மற்றும் இயக்குனரான விக்டர் சுயோஸ்த்ரோம் நடிக்கும் பாத்திரமான 78 வயதான ஐஸக் போர்க், டாக்டர் பட்டம் பெற்று 50 வருடம் ஆன பின் “தங்க டாக்டர்” பட்டம் பெறுவதற்கு ஸ்டாக்ஹோமிலிருந்து லுண்டிற்கு தன் மருமகள் மரியானுடன் (இன்க்ரிட் தூலின்) காரில் செல்கிறார். அந்த நீண்ட பயணத்தின்போது வரும் பயங்கரக் கனவுகளும் கடந்த கால நினைவுகளும் தன் வாழ்க்கை பற்றிய மறு பார்வையை அவருக்கு அளிக்கின்றன. சவ வண்டியின் சக்கரம் விளக்குக் கம்பத்தில் இடித்துக் கீழே விழும் சவப்பெட்டியிலிருந்து பிணத்தின் கை வெளியே வந்து ஐஸக்கைப் பிடித்திழுக்கும் கனவு மிகவும் பாராட்டப்பட்ட காட்சி. அவருடைய காரில் இரு நண்பர்களுடன் தொத்திக்கொள்ளும் இளம் பெண்ணாகவும், அவரது இள வயதுக் காதலியாகவும் உயிரோட்டத்துடன் நடித்துள்ளார் பீபி ஆண்டர்ஸன். காதலி ஐஸக்கின் அண்ணனை மணந்ததால், ஐஸக் வேறொருத்தியை மணந்து அது தோல்வியில் முடிந்தது. எல்லோரிடமிருந்தும் ஒதுங்கி மனித நேயமற்றுப் போனதாக ஐஸக் உணர்வதை விக்டர் சுயோஸ்த்ரோம் தன் அதிசயமான நடிப்பால் சித்தரித்து படத்தை உயர்நிலைக்குக் கொண்டு செல்கிறார். தலை சிறந்த இயக்குநராகக் கருதப்படும் ரஷ்ய திரைப்படச் சிற்பியானஆண்ட்ரெய் தார்கோவ்ஸ்கி இந்தப் படத்தையும், இன்னும் இரண்டு பெர்க்மன் படங்களையும் (Persona & Winter Light) தனக்குப் பிடித்த 10 படங்களின் பட்டியலில் சேர்த்துள்ளார். Wild Strawberries பெர்லினில் கோல்டன் பேர் விருது பெற்றது.

Max von Sydow in ‘The Virgin Spring’

3. The Virgin Spring (1960)
நார்ஸ் தொன்மத்தை (mythology) அடிப்படையாகக் கொண்டு இடைக்கால சுவீடனில் நடக்கிறது இந்தப் படம். இதன் கதை மெழுகுவர்த்திகளை மாதா கோவிலில் கொடுக்க குதிரை மேல் காட்டு வழியாகச் செல்லும் கன்னிப்பெண் காரின் (பர்கிட்டா பேட்டர்ஸன்) கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும் அவள் தந்தை டோர் (மேக்ஸ் ஃபான் ஸைடோ) அதற்காக பழி வாங்குவதும் ஆகும். “பழி வாங்குவதை என்னிடம் விடு” என்ற கிறித்துவ சித்தாந்தத்தை மீறி பழைய பகன் (Pagan) வழியில் நடப்பதற்கு முன் ஒரு மரத்தைச் சாய்த்து அதன் இலைகளால் தன்னை அடித்துக் கொண்டு தனக்கு தண்டனை கொடுத்துக் கொள்கிறார் டோர். அப்பாவி இளம்பெண்ணின் கொலையையும், பழி வாங்குதலையும் பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளைப் புரிந்து கொள்ள முடியா விட்டாலும் பாவ மன்னிப்பு வேண்டி கொலை நடந்த இடத்தில் மாதா கோவில் கட்டுவதாக டோர் வாக்குறுதி கொடுத்ததும் நடக்கும் அதிசயத்துடன் படம் முடிகிறது. The Virgin Spring, சிறந்த அயல்மொழிப் படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றது.

Bibi Andersson & Liv Ullmann in ‘Persona’

4. Persona (1966)
பெர்க்மன் படங்களிலேயே தலை சிறந்தது என்று சொல்லக்கூடிய Persona வில் நடிகை எலிசபெத் (லிவ் உல்மன்) ஒரு நாடகத்தில் திடீரென்று பேசுவதை நிறுத்தி விடுகிறாள். தொலைக்காட்சியில் வியட்நாம் பற்றிய செய்தியில் அவள் பார்க்கும் தீக்குளிப்பின் பயங்கரம், தன்னிடம் அவள் காணும் வெறுமையின் பயங்கரத்தைப் பிரதிபலிக்கிறது. வைத்தியர் ஆலோசனையின்படி கடலோரத்தில் ஒரு குடிலில் செவிலி அல்மாவுடன் (பீபி ஆண்டர்ஸன்) தங்குகிறாள். இரு நடிகைகளின் முகங்களும் ஒத்திருக்கின்றன. அவர்களது முகங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும் இணைவதாகவும் காட்டப்படுகின்றன. அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப் படுகிறார்கள். அல்மா தானும் இன்னொருத்தியும் இரு சிறுவர்களுடன் சல்லாபம் செய்த கதையைக் கூறுகிறாள். அல்மா கர்ப்பமடைந்து கருச்சிதைவு செய்து கொண்டதால் குற்ற உணர்வுடன் இருப்பதாகச் சொல்கிறாள். எலிசபெத் பேசா மடந்தையாகத் தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அல்மா பலவீனமாக உணர்ந்து அவள் மேல் தன் உணர்ச்சியைக் காட்டுகிறாள்.

Ingrid Thulin & Gunnel Lindblom in ‘The Silence’

5. The Silence (1963)
மன வேற்றுமை கொண்ட இரு சகோதரிகளான எஸ்தெரும் (இன்க்ரிட் தூலின்) அன்னாவும் (குன்னெல் லிண்ட்ப்லோம்), எஸ்தெருக்கு உடல் நிலை மோசமானதால் புகை வண்டிப் பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு மொழி தெரியாத டிமோகா என்ற ஊரில் அன்னாவின் மகனுடன் ஒரு விடுதியில் தங்குகிறார்கள். சகோதரிகளின் மனோபாவங்களின் வித்தியாசமும், குடும்பத்தில் மோதலும், அவர்களிடையே போட்டியும் வெளி வருகின்றன. தன் அக்கா எஸ்தெருக்கு வெறுப்பேற்றவே ஒருவனைப் பிடித்து அவனுடன் உடலுறவு கொள்கிறாள் அன்னா. டிமோகாவைச் சேர்ந்தவர்களுடன் பேச முடியாமலிருப்பதால் அவர்களுடன் படத்தின் தலைப்புக்கேற்ப மௌனம்தான் நிலவுகிறது. விடுதிக்கு வெளியே சாலையில் சுற்றி வரும் ராணுவ tank அன்னாவின் மனநிலையைக் குறிக்கிறது. எஸ்தெரை அன்னா தன் செய்கைகளாலும் வார்த்தைகளாலும் தாக்குகிறாள்.

Ingrid Thulin, Kari Sylwan & Liv Ullmann in ‘Cries and Whispers’

6. Cries and Whispers (1972)
பெர்க்மனின் முந்தைய படமான The Silence ஐ விட இந்தப்படத்தில் இன்னும் விரிவாக, மரணப் படுக்கையில் இருக்கும் அக்னெஸைப் (ஹாரியட் ஆண்டர்ஸன்) பார்த்துக்கொள்ள அவளது இரு சகோதரிகளான மரியாவும் (லிவ் உல்மன்) காரினும் (இன்க்ரிட் தூலின்) வருவதாகக் கதை போகிறது. அடக்கி வைக்கப்பட்ட அவர்களது உணர்ச்சிகள் கட்டவிழ்க்கப்படுகின்றன. சுயச்சிதைவு போன்ற படிமங்களினூடே பெர்க்மன் உணர்ச்சிகளைக் காட்டுவதில் இதை விடத் தீவிரம் காட்டியதில்லை. சிவப்பு வண்ணத்தில் முக்கி எடுக்கப்பட்ட இதன் வண்ண வகைமுறை எட்வர்ட் மஞ்சின் ஓவியங்களிலிருந்து வந்திருக்கலாம். அக்னெஸ் இறந்த பிறகு உயிர்த்தெழுவது போன்ற கனவுக்காட்சியில் கருணையின் உருவான பணிப்பெண் அன்னா, மைக்கேலாஞ்ஜலோவின் பீட்டா என்ற சிற்பத்தைப் போல், அக்னெஸைத் தன் மடியில் வைத்திருக்கிறாள். ஸ்வென் நைக்விஸ்டுக்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கரை Cries and Whispers வாங்கிக்கொடுத்தது.

இந்து மெட்ரோ பிளஸ் செய்தித்தாளில் வந்த என் ஆங்கிலக் கட்டுரையின் விரிவான தமிழாக்கம் இது. நன்றி இந்து.

Babu Subramanian

#IngmarBergman #TamilArticle #WorldCinema

--

--