Thirai Naanooru
5 min readMar 29, 2021

--

10 ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட டேவிட் ஃபின்சரின் ‘Mank’ வாழ்க்கை வரலாற்றுப் படமா, கட்டுக் கதையா?

பாபு சுப்பிரமணியன்

‘Mank’/ David Fincher/ USA/ 2020

மேன்க்’ இல் அமண்டா ஸைஃபிரெட் மற்றும் கேரி ஓல்ட் மேன்

நெட்ப்ளிக்ஸில் டிசம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது டேவிட் ஃபின்சர் இயக்கிய ‘மேன்க்’. இது, 1941 இல் வந்த திரை வரலாற்றில் ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் கிலாசிக்கான (classic) ‘சிட்டிசன் கேன்’ படத்திற்கு திரைக்கதை எவ்வாறு எழுதப் பட்டது என்பதைப் பற்றியதால் திரை ஆர்வலர்கள் இதைப் பார்க்க விரும்புவார்கள். அந்த ஆர்சன் வெல்ஸ் படத்தில் கேன் இறப்பதற்கு முன் சொன்ன “ரோஸ்பட்” என்ற சொல்லின் பொருள் தேடி நிருபர் ஜெர்ரி தாம்சன் அலைந்தது மர்மமாக இருந்தது. அது போன்று அந்தப் படத்தின் திரைக்கதையின் படைப்பாளியாக யாரைச் சொல்லலாம் என்பதும் மர்மமாக்கப் பட்டது. படத்தில் பெயர் போடும்போது ஹெர்மன் மேன்கீவிஸும் ஆர்சன் வெல்ஸும் இணைந்து எழுதியதாக வருகிறது. அதன்படி அவர்கள் இருவருக்கும் சுயமாக எழுதப் பட்ட திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது 1942 இல் வழங்கப் பட்டது. இருந்தும் “நியூ யார்க்கர்” பத்திரிகையின் திரை விமரிசகராக இருந்த பாலின் கேல் 1971இல் ஒரு புத்தக நீளத்துக்கு எழுதிய “ரேய்சிங் கேன்” (கேனை வளர்த்தல்) என்ற கட்டுரையில் பெரும்பாலும் ஹெர்மன் மேன்கீவிஸ் தான் திரைக்கதையைப் படைத்தார் என்றார். வெல்ஸின் ஆதரவாளர்களிடமிருந்து அதற்கு வலுவான மறுப்பு வந்தது. டேவிட் ஃபின்சரின் தந்தை ஜேக் ஃபின்சரின் திரைக்கதையில் எடுக்கப்பட்ட ‘மேன்க்’ அந்த விவாதத்தை ஞாபகப் படுத்துகிறது.

கதைச் சுருக்கம்

கேரி ஓல்ட்மேன் ‘மேன்க்’ இல் ஹெர்மன் மேன்கீவிஸாக நடிக்கிறார்

பாலின் கேலால் 50,000 வார்த்தைகளில் வசீகரமான நடையில் எழுதப்பட்ட நீள் கட்டுரைதான் ஜேக் ஃபின்சர் திரைக்கதை எழுதத் தூண்டுதலாக இருந்திருக்கும். தந்தை ஃபின்சர் அதிலிருந்து சில சம்பவங்களையும் நகைச்சுவையான வரிகளையும் எடுத்திருக்கிறார். கேல் கட்டுரையில் வரும் கீழ்க் கண்ட பத்தி — ஹெர்மன் மேன்கீவிஸ் எப்படி திரைக்கதையை எழுதினார் என்பதை விவரிப்பது — ‘மேன்க்’கின் சுருக்கமாகவும் அமைகிறது: “1940 இன் தொடக்கத்தில் ‘சிட்டிசன் கேன்’ எழுதப்பட்ட போது ஆர்சன் வெல்ஸ் அங்கே இல்லை. தன் உடைந்த காலில் கட்டுடன் தட்டுத் தடுமாறி நடந்து வந்த மேன்கீவிஸ் மது அருந்தும் தூண்டுதலிருந்து விலக்கப்பட்டு லாஸ் ஏஞ்ஜலீசிலிருந்து 65 மைல் தூரத்தில் கலிஃபோர்னியா மாநிலத்தில் விக்டர்வீலில் திருமதி கேம்பெல்லின் விருந்தினர் பண்ணையில் திரைக்கதை எழுத அனுப்பி வைக்கப்பட்டார். அவரைப் பார்த்துக் கொள்ள ஒரு செவிலியும் ஒரு காரியதரிசியும் அவரை விடாமல் எழுதச் செய்ய ஜான் ஹௌஸ்மனும் உடனிருக்க இவர்கள் எல்லோரும் — சவாரி செய்ய குதிரைகள் உள்ள பண்ணை மற்றும் ஒய்வு இல்லம் இரண்டும் கொண்ட, குடிப்பதற்கு தடை செய்யப்பட்டு மதுவும் கிடைக்காத இடத்தில் — ‘சிட்டிசன் கேன்’ இன் முதல் வரைவு (draft) முடியும் வரை மூன்று மாதங்கள் தங்கி இருந்தார்கள்.”

கட்டமைப்பு (structure)

அமண்டா ஸைஃபிரெட் ‘மேன்க்’ இல் மேரியன் டேவிசாக வருகிறார்

‘மேன்க்’, டேவிட் ஃபின்சரின் முந்தைய படமான ‘தி சோஷல் நெட்ஒர்க்’ (2010) போல், இரு கால கட்டங்களில் பயணிக்கிறது: தற்போதைய காலத்திலிருந்து (1940) ஹாலிவுடில் கடந்த காலத்திற்கு (1930கள்) — மேன்கீவிஸ் திரைக்கதாசிரியாராக பேசும் படங்களில் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து — தாவுகிறது. குடிப்பது மற்றும் ஹாலிவுடில் சக திரைக்கதாசிரியர்களுடன் (பென் ஹெக்ட், சார்ல்ஸ் லேடெரெர் போன்று மேன்கீவிஸால் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பலர்) சூதாட்டம் என்று மேன்கீவிஸ் சுய அழிவு செய்து கொண்டதை ஃபிளாஷ்பேக்குகள் காண்பிக்கின்றன. அந்த சமயத்தில் தான் லூயிஸ் பி மேயர், இர்விங் தால்பெர்க் போன்ற ஹாலிவுட் மொகல்கள் ஸ்டுடியோக்களை ஆண்டனர். ஃபிளாஷ்பேக்குகள் மேன்கீவிஸ் தான் கூடிப் பழகிய செய்தித்தாள் அதிபர் வில்லியம் ரேண்டால்ஃப் ஹெர்ஸ்ட் (‘சிட்டிசன் கேன்’ படத்தில் சார்ல்ஸ் ஃபாஸ்டர் கேனுக்கு மாடல் ) மற்றும் ஹெர்ஸ்டின் தோழியான நடிகை மேரியன் டேவிஸ் (அந்தப் படத்தில் சூஸன் அலெக்சாண்டர் பாத்திரத்துக்கு ஓரளவு அடிப்படை) ஆகியோர் மேல் ஏன் வெளிச்சம் காட்டினார் என்பதையும் ஆராய்கிறது.

நூற்றாண்டின் பிரச்சாரத்தில் ஹாலிவுடின் பங்கு

‘மேன்க்’ இல் கேரி ஓல்ட்மேன் & பெர்டினாண்ட் கிங்ஸ்லி

ஹாலிவுட் ரிபப்லிக கட்சியை ஆதரித்த அந்தக் காலத்தில் எம் ஜி எம் ஸ்டுடியோ, திரைப்படம் போடுவதற்கு முன் தியேட்டரில் காட்டி வந்த நியூஸ் ரீல்கள் மூலமாக, போலி செய்தியைப் பரப்பியதாம். எம் ஜி எம் தயாரிப்பாளர் இர்விங் தால்பெர்க் (பெர்டினாண்ட் கிங்ஸ்லி) கலிஃபோர்னியா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட ரிபப்லிக வேட்பாளர் ஃபிராங்க் மெரியத்துக்கு நன்கொடை கொடுக்குமாறு மேன்கீவிஸை (கேரி ஓல்ட் மேன்) கேட்கும் போது அவருக்கு கோபம் வருகிறது. ஆனால் “சிலேட்” பத்திரிகையில் வந்த “‘மேன்க்’ இல் எது உண்மை, எது கதை” என்ற கட்டுரையில் மேத்யூ டெஸ்ஸெம் எழுதியபடி நிஜ மேன்கீவிஸ் பெரும்பாலும் சற்று கோணலான பழமைவாதி (skewed conservative). மெரியத்துக்கு நன்கொடை கொடுக்க மறுத்த எழுத்தாளர் பட்டியலில் அவரில்லை. “நூற்றாண்டின் பிரச்சாரம்: அப்டோன் சிங்க்லேரின் கலிஃபோர்னியா கவர்னர் பதவிக்கு போட்டியும் ஊடக அரசியலும்” என்ற புத்தகத்தை எழுதிய கிரெக் மிட்செல் தன் நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையில் எழுதியிருக்கிறார்: “ஹெர்மன் [மேன்கீவிஸ்] சிங்க்லேரை ஆதரித்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. அவரது தம்பியோ [ஜோ மேன்கீவிஸ்] சிங்க்லேரை தாக்கி அதிர்ச்சியூட்டக்கூடிய முறைகேடான வானொலி நாடகங்களை எழுதினார்”. மேன்கீவிஸின் நண்பராக வந்து தான் எடுத்த போலி நியூஸ் ரீல்களுக்காக வருந்தி பின் தற்கொலை செய்து கொள்ளும் ஷெல்லி மெட்காஃப் ஒரு கற்பனைப் பாத்திரம்.

காட்டிக் கொடுத்தவர் மற்றும் நாயகர்

சார்ல்ஸ்டான்ஸ் ‘மேன்க்’ இல் வில்லியம்ரேண்டால்ஃப் ஹெர்ஸ்ட் பாத்திரத்தில்

மேத்யூ டெஸ்ஸெமின் “சிலேட்” கட்டுரை உண்மையைக் கண்டறிய உதவுகிறது. ஹெர்ஸ்ட் (சார்ல்ஸ் டான்ஸ்) மற்றும் டேவிஸை (அமண்டா ஸைஃபிரெட்) சமூக ரீதியாக அறிந்தவரான மேன்கீவிஸ், ‘சிட்டிசன் கேன்’இல் ஸானடுவுக்கு (Xanadu) மாடலான ஹெர்ஸ்டின் கோட்டையில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்வது காண்பிக்கப் படுகிறது. ஹெர்ஸ்ட் கோட்டையில் நடக்கும் கற்பனையான கடைசிக் காட்சியில் மேன்கீவிஸ் ஒரு படத்திற்கு கதைக்கருவை சொல்லுவதாக வருகிறது. அது ஹெர்ஸ்டை மாதிரியாகக் கொண்ட ‘சிட்டிசன் கேன்’க்கு ஆரம்ப எடுப்பு (version). அதை மேன்கீவிஸ் விருந்தில் சொல்லும்போது சமதர்மவாதியான (socialist) சிங்க்லேரை தோற்கடித்ததில் ஹெர்ஸ்டின் பங்கை நுழைக்கிறார். மேன்கீவிஸ் அப்டோன் சிங்க்லேரை ஆதரித்தாக பதிவு ஒன்றும் இல்லை என்பது முன்னமேயே குறிப்பிடப்பட்டது. ‘மேன்க்’கின் கதாநாயகர் ஹெர்ஸ்டை காட்டிக் கொடுத்ததை நியாயப் படுத்துவதற்காக, படம் மேன்கீவிஸை ஒரு ஹீரோவாகக் காட்டி ஊடக அதிபரை எல்லார் முன்னாலும் ஏளனம் செய்வதாக கதை புனைகிறது. நடிகர் கேரி ஓல்ட் மேன் மேன்கீவிஸ் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ஆனால் படத்தில் சேர்க்கப்பட்ட கற்பனைகள் அவரைக் கட்டிப்போடுகின்றன . ஹெர்ஸ்டாக நடிக்கும் சார்ல்ஸ் டான்ஸ் சிறிது நேரமே வருவதால் அவரால் தன் பாத்திரத்தின் நுணுக்கங்களைக் கொண்டு வர முடியவில்லை.

’30 மற்றும் ‘40களின் மீள் உருவாக்கம்

‘மேன்க்’

‘சிட்டிசன் கேன்’ பிறந்த கதையை சொல்லும் படமென்பதால் ஒளிப்பதிவாளர் ரிக் மெஸ்ஸெர்ஷ்மிட் கருப்பு வெள்ளையில் டீப் ஃபோகஸ் மற்றும் லோ ஆங்கிள்களை உபயோகித்து மேன்க்’ ஐ எடுத்திருக்கிறார். நாடகங்களில் காட்சி மாறுவதை நடிகர்களுக்கு நினைவு படுத்த அரங்கில் விளக்குகளை அணைப்பார்கள். அதே மாதிரி ‘சிட்டிசன் கேன்’ இல் செய்ததை ‘மேன்க்’கும் செய்து ஆழ்ந்த டிசால்வ்களை (deep dissolves) கொண்டு வருகிறது. டிஜிட்டல் படமானாலும் திரைச்சுருளில் எடுக்கப்பட்ட அந்த கால திரைப்படங்களுக்கு வந்தனை கூறுகிறது. தியேட்டரில் ஒரு ரீல் முடியும்போது அடுத்த ரீலுக்கு மாற ப்ரொஜெக்ஷனிஸ்டுக்கு தெரிவிக்க “சிகரெட் பர்ன் “ என்று சொல்லப்பட்ட வட்ட வடிவமான குறிகளை ரீலில் போடுவார்கள். அது போன்ற குறிகளை ‘மேன்க்’ இல் காணலாம். சான் சிமியன் என்ற ஹெர்ஸ்டின் கோட்டையின் வெளிப்புறத்தில் குரங்குகள் யானைகள் மற்றும் ஒட்டகச் சிவிங்கிகள் வரும் காட்சி “டே ஃபர் நைட்” முறையில் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. விருந்து காட்சிகள் பிரமாதம் — குறிப்பாக ‘சிட்டிசன் கேன்’ ஐ நினைவூட்டும் பனிக்கட்டியால் செய்யப்பட்ட யானை மற்றும் பிரமாண்டமான 1934 என்று எழுதப்பட்ட பலகை ஆகியவை அடங்கிய தேர்தல் தின விருந்தை சொல்லலாம். Hi Dynamic Range இல் எடுக்கப்பட்டதால் இந்த டிஜிட்டல் படம் அண்டங்கருப்பு மற்றும் வெவ்வேறு சாம்பல் வண்ணங்களில் நிழல்கள் ஆகியவற்றை துல்லியமாக பதிவாக்கி ‘சிட்டிசன் கேன்’இல் ஒளிப்பதிவாளர் கிரெக் டோலன்ட் ஏற்படுத்தியது போன்ற தோற்றத்தைக் கொண்டு வருகிறது.

படைத்தவர் யார் என்ற கேள்வி

‘மேன்க்’ இல் ஆர்சன்வெல்ஸாக டாம் பர்க்

படத்தின் நாயகன் என்பதால் மேன்கீவிஸ் முழுவதுமாக ஆக்கிரமிப்பதால் ஆர்சன் வெல்ஸாக நடிக்கும் டாம் பர்க் சிறிது நேரமே வருகிறார். மேன்கீவிஸ் பெயர் போடாமல் திரைக் கதை எழுத ஆர்சான் வெல்ஸ் கொடுக்கும் 10,000 டாலரை வாங்க மறுப்பதாகவும், அதனால் வெல்ஸ் ஆத்திரமடைந்து கையில் அகப்பட்டதை தூக்கிப் போடுவதுபோல் ஒரு காட்சியில் காண்பிக்கப் படுகிறது. இது, பாலின் கேல் தன் கட்டுரையில் “ஆர்சன் வெல்ஸ் முதலிலேயே சொன்னபடி மேன்கீவிஸின் பெயர் படத்தில் வராது என்பதிலிருந்து மாற்றம் கிடையாது என்பதில் உறுதியாக இருந்தார்” என்று நன்னலி ஜான்ஸனை மேற்கோள் காட்டி எழுதியிருப்பதை, அடிப்படையாகக் கொண்டது. வெல்ஸ் இது உண்மையல்ல என்று கூறியிருக்கிறார். கேலின் கட்டுரைக்கு வந்த மறுப்பில் அவர் தன் கட்டுரைக்கு ஆர்சன் வெல்ஸை பேட்டி காணவில்லை என்பது சுட்டிக் காட்டப் பட்டது. இயக்குனர்தான் படத்தின் கர்த்தாவும் அதன் படைப்பு சக்தியுமாவார் என்று கூறும் ஓதர் கோட்பாட்டை (auteur theory) தீவிரமாக எதிர்த்தவர் கேல். ஆதலால் அவர் ஒரேயடியாக மேன்கீவிஸ்தான் ‘சிட்டிசன் கேன்’ இன் கர்த்தா என்று முடிவு செய்ததால் வெல்ஸை பேட்டி காண்பது அவசியமில்லை என்று நினைத்து விட்டார் போலும். மேத்யு டெஸ்ஸெம் விமரிசகர்களின் பொதுவான ஒருமித்த கருத்து என்ன என்று ராபர்ட் எல் கேரிங்கர் என்பவர் 1978 இல் “சிட்டிசன் கேனின் திரைக்கதைகள்” என்ற கட்டுரையில் படத்தின் ஏழு வரைவுகளை (drafts) ஆராய்ந்து கண்டதை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார். அந்த மேற்கோள்: “வெல்ஸின் பங்களிப்பில் மேன்கீவிஸின் திரைக்கதை, ஒரு வலுவான கதையின் அடிப்படையிலிருந்து நிஜமாகவே ஆகச் சிறந்த படைப்புக்குத் திட்டமாக உருமாற்றம் அடைந்தது”.

‘மேன்க்’ படம் ‘சிட்டிசன் கேன்’ இன் படைப்பாளர் யாரென்பது பற்றியல்ல. ‘மேன்க்’இன் கதாநாயகனைப் பற்றி பாதி கற்பனையில் புனையப்பட்ட கட்டுக்கதை அது எனினும் அந்தக் காலத்தைக் கண் முன் கொண்டு வந்து அதிசயிக்க வைக்கிறது.

Babu Subramanian

David Fincher’s Netflix film ‘Mank’ (2020)Film Review in Tamil. World Cinema.

--

--