கீழ்தள மனிதனின் மணம் — ‘Parasite’ (2019)

ஒளி, நுகர்வு மூலம் கொரியப் படமான ‘பேரசைட்’டில் வர்க்க அமைப்பை சித்தரிக்கிறார் இயக்குனர் பாங் ஜூன்-ஹோ

Thirai Naanooru
6 min readFeb 14, 2020

பாபு சுப்பிரமணியன்

Parasite/ Bong Joon-ho/ South Korea/ 2019

‘பேரசைட்’டில் சாய் வூ-ஷிக், சாங் கங்-ஹோ , ஜங் ஹை-ஜின் & பார்க் ஸோ-டாம்

திரை ஆர்வலர்கள் தென் கொரிய இயக்குனர் பாங் ஜூன்-ஹோவின் ‘மெமரீஸ் ஆஃப் மர்டர் ‘ (2003), ‘மதர்’ (2009) போன்ற அருமையான படங்களைப் பார்த்திருப்பார்கள். ‘மெமரீஸ் ஆஃப் மர்டர் ‘, தென் கொரியாவில் முதன் முதலாக நடந்த தொடர் கொலைகள் பற்றிய உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது. யார் கொலைகாரன் என்ற மர்மத்தை கட்டவிழ்க்க காவல்துறை காட்டிய மிருகத்தனத்தையும், திறமையின்மையையும் சித்தரித்தது. மனத்தை நெருடுகின்ற ‘மதர்’, தன் அறிவுத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மகனை பொத்திப் பொத்தி காத்து வரும் விதவை பற்றியது. பாங் ஜூன்-ஹோவின் சமீபத்திய படமான ‘பேரசைட்’, கேன் பாம் டோர் (Cannes Palme d’Or) மற்றும் பல விருதுகளை அள்ளிக் குவித்து விட்டு இப்போது நான்கு ஆஸ்கர்களை பெற்றிருக்கிறது — அவற்றில் தலை சிறந்த படத்திற்கான விருது முதன் முறையாக ஆங்கிலமல்லாத வேற்று மொழிப் படமான ‘பேரசைட்’டுக்கு கிடைத்திருக்கிறது. தற்போது இந்திய தியேட்டர்களில் ஆஸ்கர் திரைப் பட விழாவில் ‘பேரசைட்’ ஓடுகிறது.

‘பேரசைட்’டில் பார்க் ஸோ-டாம் & சாய் வூ-ஷிக்

‘பேரசைட்’ படத்தில் தெருவின் மட்டத்திற்கு மேல் பாதியும் அதற்குக் கீழே பாதியும் உள்ள பஞ்சிஹா (banjiha) என்கிற செமி பேஸ்மென்டில் தான் குடியிருக்கிறது கிம்மின் குடும்பம். தென் கொரியாவின் தலைநகரான ஸோலில் ஆயிரக்கணக்கான மக்கள் இப்படித்தான் வசிக்கிறார்களாம். கிம், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் எல்லோருமே முழு நேர வேலை கிடைக்காமல் தற்காலிகமாக ஏதோ செய்து கொண்டு உயிர் வாழ்கிறார்கள். அவருடைய மகனும் மகளும் வீட்டின் கூரையில் ஒரு இடம் விடாமல் திருட்டு அருகலை (wifi) தேடுவது நகைச்சுவையான காட்சி. மகனின் நண்பன் செல்வம் பெற்றுத் தரும் “அறிஞனின் பாறை”யை பரிசாகக் கொடுக்கிறான். அவன் மேற்படிப்புக்குச் செல்வதால், தான் பரீட்சைக்குப் பயிற்றுவிக்கும் பணக்காரப் பெண்ணுக்கு வாத்தியாராக பொய் சான்றிதழ் காண்பித்து தன் வேலையை எடுத்துக் கொள்ளச் சொல்கிறான்.

அல்ஃபோன்சோ குரோனின் ‘ரோமா’வுடன் ஒப்பீடு

இந்தப் படத்தை நன்றாகப் புரிந்து கொள்ள போன வருடம் ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற அல்ஃபோன்சோ குரோனின் ‘ரோமா’ (2018) உடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ‘ரோமா’, மெக்ஸிகோ நகரத்தில் 1971 இல் ஒரு வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணைச் சுற்றி வருகிறது. அவளுடைய காதலன், அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும், அவளைக் கைவிட்டுப் போய்விடுகிறான். நியோ ரியலிஸப் படங்களில் பொதுவாக ஓர் ஏழையான கதாபாத்திரத்தைப் பாதிக்கப்பட்டவராக (victim) காண்பித்து அவரிடம் இரக்கம் ஏற்படுத்தும் சூத்திரத்தைப் பின்படுத்துகிறது ‘ரோமா’. ஆழமற்ற பாத்திரப் படைப்பு அவளை ஒரேயடியாக புனிதமாளவளாகக் காண்பிக்கிறது. அவளுக்கும் அவளுடைய எஜமானிக்கும் இடையே சுமுகமான உறவு இருக்கிறதாம்! குரோன் தன் வாழ்க்கையை சற்று அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருப்பதால் பாத்திரங்களிடமிருந்து அவரால் விலக முடியவில்லை என்று தெரிகிறது.

‘பேரசைட்’டில் சாய் வூ-ஷிக், பார்க் ஸோ-டாம், சாங் கங்-ஹோ & ஜங் ஹை-ஜின்

இதற்கு எதிர் மாறாக வர்க்க வித்தியாசத்தை ஆழமாகவும் சுவையாகவும் காண்பிக்கிறது ‘பேரசைட்’. வேலை தேடும் கிம்மின் குடும்பம் வேலையில் சேர எதுவும் செய்யத் தயார். பார்க் குடும்பத்தலைவியை எளிதாக ஏமாற்றி தாங்கள் ஒருவருக்கொருவர் சொந்தமில்லாதது போல் நடித்து அந்த வீட்டின் எல்லா வேலைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். பார்க் குடும்பம் கூடாரத்தில் முகாமிருக்கப் போயிருக்கும் சமயத்தில் அவர்களுடைய வீட்டை முழுவதும் ஆக்கிரமித்து அதன் சொகுசுகளை அனுபவிக்கிறார்கள். இது, லூயி புனுவெலின் ‘விரிடியானா’ (1961) என்ற படத்தில் ஒரு பிச்சைக்காரக்கும்பல் அவர்களுக்கு உதவி செய்து சாப்பாடு போடும் பெண்மணி ஊரில் இல்லாதபோது அவள் வீட்டிற்குள் புகுந்து கூத்தடித்து விருந்து சாப்பிடுவதை ஞாபகப் படுத்துகிறது. ஆனால் இந்த இரண்டு படங்களும் சொல்ல வருவது வேறு. ‘விரிடியானா’ மதம் சம்பந்தப்பட்டது.

‘பேரசைட்’ மேல் தாக்கம் செய்த படங்கள்

இயக்குனர் பாங், “தி ப்லே லிஸ்ட்” என்ற இணையதளத்தின் பேட்டியில், ‘பேரசைட்’ மேல் தாக்கம் செய்த ஐந்து படங்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார். தனக்கு வழிகாட்டியாக பாங் கருதும் கிம் கி-யங்கின் கொரியப்படமான ‘ஹௌஸ்மெய்ட்’ (1960) அதில் இடம் பெறுகிறது. கிம் கி-யங்கின் அந்த திகில் திரில்லரில் ஒரு பணிப்பெண்ணின் வருகையால் துன்பத்தில் ஆழ்வது ஒரு நடுத்தரக் குடும்பம். ‘பேரசைட்’டில் பணிப்பெண்ணை அமர்த்துவது ஒரு உயர் குடிக் குடும்பமாதலால் வர்க்க வித்தியாசம் இதில் அதிகம். ஆனால் கிம் குடும்பத்தின் ஊடுருவலை ஒளி வடிவாக (விஷுவலாக) காட்ட ‘பேரசைட்’டில் மாடிப்படிக்கட்டுகள் உதவுவது, ‘ஹௌஸ்மெய்ட்’ இல் ஒரு முக்கியமான காட்சியில் மாடிப்படிக்கட்டுகளை உபயோகித்திருப்பது போன்றது என்கிறார் பாங்.

‘பேரசைட்’டில் லீ சன்-க்யுன் & சோ இயோ-ஜியோங்

க்ரைம் திரைப்பட பிரெஞ்சு மாஸ்டரான க்ளாட் ஷெப்ராலெயின் இரண்டு படங்கள் — ‘லா செரிமொனி’ (1995) மற்றும் ‘தி பீஸ்ட் மஸ்ட் டை’ (1969) — பாங்கின் பாதிப்பு செய்த பட்டியலில் இருக்கின்றன. ‘லா செரிமொனி’, தன் தபால் அலுவலக குமாஸ்தா நண்பியின் தூண்டுதலால் பணக்கார எஜமானரை எதிர்த்து சண்டை போடும் ஒரு பணிப்பெண் பற்றியது. ஷெப்ராலெயின் படத்தின் முக்கிய அம்சமான கலாச்சாரம் ‘பேரசைட்’டில் இல்லை. எனினும், வர்க்க வித்தியாசம் இரண்டு படங்களுக்கும் பொதுவானது. பாங்கின் படம் பிளாக் காமெடி மற்றும் திரில்லர் வகைகளின் (genre) கலவை. ‘தி பீஸ்ட் மஸ்ட் டை’ ஒரு திரில்லர் என்பதால் பாங் தன் பட்டியலில் சேர்த்திருக்கலாம். இல்லையெனில் அதற்கும் பாங் படத்திற்கும் சம்பந்தமில்லை.

தாக்கம் செய்ததாக பாங் சொல்லும் இன்னொரு படம் ‘தி சர்வன்ட்’ (1963). ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டு ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த அமெரிக்க இயக்குனர் ஜோஸஃப் லூஸி இயக்கியது. ஹெரால்ட் பின்டர் திரைக்கதை எழுதி விமரிசகர்களின் பாராட்டு பெற்று நல்ல வசூலையும் தந்த மூன்று படங்களில் ஒன்று ‘தி சர்வன்ட்’. இந்தப்படத்தில் வரும் வேலைக்காரன் தன் காதலியை சகோதரி என்று சொல்லி தான் வேலை செய்யும் வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்த வைக்கிறான். எஜமானரை அவர்கள் ஏமாற்றுவதும் அவரது வீட்டை ஆக்கிரமித்து அவரது அறைகளை உபயோகிப்பதும் ‘பேரசைட்’டில் வருகின்றன.

‘பேரசைட்’டில் பார்க் ஸோ-டாம், சாங் கங்-ஹோ & சாய் வூ-ஷிக்

பாங்கின் பட்டியலில் ஐந்தாவது படம் மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என்று அழைக்கப்படும் ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக்கின் ‘ஸைகோ’ (1960). அதில் வரும் நார்மன் பேட்ஸின் வீட்டிலிருந்து தன் படத்தின் வீடு எப்படியிருக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தது பற்றி பாங் சொல்கிறார்: “அதுவும் இரண்டு மாடிக் கட்டிடம். அதனுள்ளிருக்கும் மாடிப்படிக்கட்டுகள் கீழே பதுங்கியிருக்கும் ரகசியங்களுக்கு இட்டுச்செல்லும்.” இதுதான் ‘பேரசைட்’டில் நம்மைக் கவர்ந்து இழுக்கும் அம்சம். பாதிப்படத்தில் நமக்குத் தெரிய வருகிறது வீட்டுக்கு அடியில் ஆழத்தில் இருக்கும் பதுங்கு அறையில் கந்து வட்டிக்காரர்களிடமிருந்து தப்பி நான்கு வருடங்களாக ஒருவன் தலை மறைவாக வாழ்கிறான் என்று. பணத்தில் மிதக்கும் பார்க் குடும்பம் ஒரு வடிவமைப்பாளரால் (architect) கட்டப்பட்ட அரண்மனை போன்ற வீட்டில் வசிக்கின்றது. அந்த ஏழைக் கடனாளியோ அதற்குக் கீழே பாதாளத்தில் அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக தங்கியிருக்கிறான்.

வர்க்க வித்தியாசம் — ஒளி வடிவில்

கதாபாத்திரங்களிடையே வர்க்க வித்தியாசத்தை ஒளி வடிவாக (விஷுவலாக) சில படங்கள் காட்டியிருக்கின்றன. ஜான் ரென்வாவின் செவ்வியல் திரைப் படமான (classic) ‘தி ரூல்ஸ் ஆஃப் தி கேம்’ (1939) இல் “லா கொலினியர்” என்ற கிராமத்து எஸ்டேட்டுக்கு வாரக்கடைசி பயணமாக செல்லும் போது அதன் உயர் மட்ட சொந்தக்காரர் மற்றும் அவரது விருந்தாளிகள் முதல் மாடியிலும் வேலைக்காரர்கள் தரைத்தளத்திலும் தங்குகிறார்கள். இதே முறையை ரென்வாவின் படத்தால் பாதிக்கப்பட்ட ராபர்ட் ஆல்ட்மனின் ‘காஸ்ஃபர்ட் பார்க்’ (2001) இலும் பார்க்கலாம். ‘பேரசைட்’டில் அடி மட்ட மக்கள், ஃப்ரிட்ஸ் லங்கின் ‘மெட்ராபொலிஸ்’ (1927) இல் தொழிலாளிகள் பூமிக்கடியே வசிப்பது போல், கீழ் தளத்தில் வசிக்கின்றனர். வேலை இல்லாத கிம் குடும்பம் பஞ்சிஹா என்ற செமி பேஸ்மெண்டில் இருக்கின்றது . படத்தின் முதல் ஷாட்டில் தரையை ஒட்டியிருக்கும் ஜன்னல் மூலமாக தெருவைக் காட்டி விட்டு கேமரா கீழே இறங்கி கிம்மின் மகன் தரைத்தளத்திற்கு கீழே கைபேசியுடன் இருப்பதைக் காட்டுகிறது. ஏழைக் கடனாளியோ பார்க் வீட்டின் முன்னாள் உரிமையாளர் வட கொரியாவிடமிருந்து தாக்குதல் வந்தால் மறைந்து கொள்வதற்காகவும் கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பவும் கட்டிய பதுங்கு அறையில் வசிக்கிறான். வசதியுள்ளவர்கள் தரைக்கு மேலேயும் வசதியற்றவர்கள் தரைக்குக் கீழ் தளத்திலும் இருப்பது மூலம் கதாபாத்திரங்களிடையே நிலவும் வேற்றுமையைக் காட்டுகிறது பாங்கின் படம்.

வர்க்க வித்தியாசம் — நுகர்வு வடிவில்

‘பேரசைட்’டில் கேக்கை பிடித்திருக்கும் பார்க் ஸோ-டாம், அவருக்கு வலது புறம் சோ இயோ-ஜியோங்

ஒளி வடிவத்தில் மாறுபாட்டைக் காட்டும் தன் யுக்தியுடன் திருப்தியடையாமல் ‘பேரசைட்’டில் பாங் நுகர்வு மூலமாகவும் காட்டுகிறார். கிம்மின் எஜமானர் பார்க், கிம்மிடமிருந்து வரும் மணத்தைத் தாங்க முடியவில்லை என்று தன் மனைவியிடம் குறை கூறுகிறார். அவரது மகனும் கிம் குடும்பத்தில் எல்லோரிடமிருந்தும் ஒரே மாதிரியான மணம் வருகிறதென்கிறான். ஆனால், இவ்வளவு புத்திசாலித்தனமான யுக்தியை அதிகமாக உபயோகிப்பது ஒரு பயங்கரமான கொலையில் போய் முடிகிறது. பொதுவாக தென் கொரியப் படங்கள் வன்முறையைக் காட்டுவதில் நாட்டமாக இருக்கின்றன. வர்த்தக ரீதியாக வெற்றி பெற இது உதவினாலும் படங்களின் தரத்தைக் குறைக்கிறது. ‘பேரசைட்’டையும் இது பாதிக்கிறது. ‘பேரசைட்’டை விட பாங்கின் ‘மெமரீஸ் ஆஃப் மர்டர் ‘ மற்றும் ‘மதர்’ மனதை நெருடுகின்றன. எனினும், ‘பேரசைட் ‘, சிறந்த படங்களின் எண்ணிக்கை குறைவான 2019 இன் ஆகச் சிறந்த படம்.

தென் கொரிய சினிமாவுக்கு அங்கீகாரம்

சுமார் இருபது வருடங்களாக அகில உலக அளவில் பேசப் பட்டு வருகிறது தென் கொரிய சினிமா. அதை விட இன்னும் கலாபூர்வமாக ரொமேனிய சினிமா இருந்தாலும் ஜன ரஞ்சகமாக இருப்பதால் தென் கொரிய சினிமா வர்த்தக ரீதியாகவும் வெற்றி அடைந்திருக்கிறது. எதிர்பார்த்தது போல் ‘பேரசைட்’டுக்கு தலை சிறந்த அந்நிய மொழிப்படத்திற்கான (அகில உலகப் படமென்பது அதன் புதிய பெயர்) விருது கிடைத்தது. சிறந்த சுய திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளும் ‘பேரசைட்’டுக்கே சென்றன. தலை சிறந்த படத்திற்கான விருது இதுவரை ஒரு ஆங்கில மொழிப் படத்துக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கம் உடைக்கப்பட்டு முதல் முதலாக ஆங்கிலமல்லாத வேறொரு மொழிப்படமான ‘பேரசைட்’டுக்கு தலை சிறந்த படத்திற்கான விருது சென்றிருக்கிறது. ஆஸ்கர் விருதுகள் அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அகாடெமி, பிற நாட்டு திரை தொழில் வல்லுநர்களை உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளை உலகளாவியதாக ஆக்கியிருக்கிறது. ஆனால் விருது பெறுவதற்காக சரியான வாக்காளர்களைக் கவர பல கோடிகள் தேவை. அகாடெமியின் விருதுகளில் அரசியல் மற்றும் தரத்தில் குறைவு இருந்த போதிலும், நான்கு ஆஸ்கர் ‘பேரசைட்’டுக்கு கிடைத்தது அங்கீகாரம்தான் தென் கொரிய சினிமாவுக்கு — அது உலக சினிமா தொட்டிருக்கும் இடத்தை இனிமேல்தான் ஏறிப்பிடிக்க வேண்டுமென்றாலும்.

Babu Subramanian

Bong Joon-ho’s Parasite — Film Review in Tamil. World Cinema.

--

--